Reiseråd

தாய் நாட்டிற்கு விடுமுறையைக்கழிப்பதற்குச் செல்லும் போது பல அனுகூலங்கள் ஏற்படுகின்றன. இருப்பினும் நாம் சில பிரதிகூலங்களையும் எதிர் நோக்குகின்றோம். அவற்றுள் குறிப்பிடத்தக்கது தொற்று நோய்கள். எனினும் தகுந்த முன்னேற்பாடுகளெடுப்பின் இந்நோய்களைத் தவிர்க்க முடியும். அதற்கான சில அறிவுரைகளைத் தருவதே இக்கையேட்டின் குறிக்கோளாகும்.

பலருக்கு நோய் தொற்றும் வாய்ப்பிருப்பினும் சிலரே நோய்வாய்ப்படுகின்றனர். குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள், நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்தவர்கள் இலகுவில் நோய்வாய்ப்படுகின்றனர். அதனால் இவர்கள் அதிகூடிய கவனம் எடுக்க வேண்டும். இலங்கையர்களைப் பொறுத்தளவில் பலர் பயண ஒழுங்குகள் செய்யும் பொழுது குடும்பவைத்தியரைக் கலந்தாலோசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். அத்துடன் குழந்தைகட்காவது தடுப்பூசி கிடைக்க வழி செய்வார்கள். தடுப்பூசிகளை போதிய காலத்திற்கு முன் போட்டால் தான் பயணம் செய்யும் போது உடலில் எதிர்ப்புச்சக்தி உருவாகியிருக்கும். இவ்விடயத்தைச் சிலர் கவனத்தில் எடுப்பது குறைவு.

பயண ஒழுங்குகள் செய்யும் போது தாய்நாட்டில் எந்தெந்த நோய்களுக்கு ஆளாக வாய்ப்புள்ளதென்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இந்தியா போன்ற அயல் நாடுகளுக்கு மேலதிகமாகச் செல்வதனால் அதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். பின் இந்நோய்களில் எவற்றிற்கு தடுப்பு முறைகள் ( தடுப்பூசி / மருந்து ) கிடைக்குமெனப் பார்க்கவேண்டும். மிகுதி நோய்களை எவ்வாறு தவிர்த்துக் கொள்ளலாமெனக் கேட்டறிந்து கொள்ள வேண்டும்.

இலங்கைப் பயணத்தின் போது ஏற்படும் தொற்று நோய்களுள் பல உணவு நீரினாலும், சில சுவாசத்தினாலும், மலேரியா நுளம்புக்கடியினாலும் ஏற்படுகிறது. மிகச்சிறந்த சுகாதார முறைகளைக் கடைப்பிடிப்பதன் பிரகாரம் உணவு நீரினால் பரவும் நோய்களைத் தவிர்க்க முடியும். சுவாசத்தினால் பரவும் நோய்களை சன நெருக்கமான இடங்களுக்கு செல்வதைத் (பொதுசன போக்குவரத்து) தவிர்ப்பதன் மூலம் ஓரளவுக்குத் தவிர்த்துக் கொள்ளலாம்.

இனி நோர்வேயில் இருந்து இலங்கைக்குப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு பொதுவாகக் கொடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்களைப் பார்ப்போம்.

இலங்கைப் பயணத்தின் போது சிபாரிசு செய்யப்பட்டுள்ள தடுப்புமுறைகள் பின்வருமாறு

நோய்பரவும் முறைதடுப்புமுறை
Hepatitt A (மஞ்சட்காமாலை)உணவு நீர்தடுப்பூசி
Pertussis (குக்கல்)சுவாசம்தடுப்பூசி
Difeteria (தொண்டைக்கரப்பன்)சுவாசம்தடுப்பூசி
Tyfoid (நெருப்புக்காய்ச்சல்)உணவு நீர்தடுப்பூசி
Paratyfoid (ஒருவகை நெருப்புக்காய்ச்சல்)உணவு நீர்தடுப்பூசி
Malaria (மலேரியா)நுளம்புக்கடிமருந்து (tablett)

மற்றும் Shigella, Cholera போன்ற நுண்ணுயிர்களால் பரவும் வாந்திபேதி நோயும் காலத்திற்குக் காலம் பரவ வாய்ப்புள்ளது. ( Utbrudd/Outbreak)

நோர்வேயில் பிறக்கும் குழந்தைகளுக்கு பின்வரும் தடுப்பூசிகள் பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க வழங்கப்படுகின்றன. போலியோ (Polio), ஏர்புவலி (Tetanus), தொண்டைக்கரப்பன் (Difeteria), குக்கல் (Pertussis), காசம் (BCG), MMR (Measles, Mumps, Rubella – சின்னமுத்து, கூகைக்கட்டு, ஜேர்மன் சின்னமுத்து).

மாறாக இலங்கையில் பிறக்கும் குழந்தைகள் கட்டாயமாக இத்தடுப்பூசிகளை பெற்றேயாகவேண்டும். மேலாக Japanese encephaliris எனப்படும் ஒருவகை நுளம்பினால் பரவும் முளைக்காய்ச்சல் நோய்க்கும். 1 – 10 வயதிற்கிடைப்பட்டவர்களுக்கு கொழும்பிலும் மற்றும் நோய்க்கிருமிகள் காணப்படும் ஏனைய மாவட்டங்களிலும் தடுப்பூசி வழங்கப்படுகிறது.

ஆகவே மேற்குறிப்பிட்ட தடுப்பூசிகளை உங்கள் குழந்தைகள் பெற்றிருக்காவிடின் வைத்தியரின் ஆலோசனைப்படி அவற்றைப் பெற வழிவகுக்கவேண்டும்.

Hepatitt A (மஞ்சட்காமாலை நோய்) குழந்தைப் பருவத்தில் தொற்றுமிடத்து அநேகமாக நோய்க்கான அறிகுறிகள் வெளியில் தோன்றாமல் நோயை ஏற்படுத்துகிறது. இதனால் இந்நோய் காணப்படும் நாடுகளில் பிறந்து வளர்பவர்களுக்கு இயற்கையான நோய் எதிர்ப்புச்சக்தி நீண்ட காலத்திற்கு இருக்கும். ஆகவே இலங்கையில் பிறந்து வளர்ந்த பெற்றோரை விட இங்குள்ள பிள்ளைகளுக்கே இத்தடுப்பூசி மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது. Tyfoid (நெருப்புக்காய்ச்சல்) தடுப்பூசி வயது பாகுபாடின்றி எடுக்கலாம். இவ்விரண்டு தடுப்பூசிகளினதும் எதிர்ப்புச்சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை மீண்டும் மீண்டும் பயணம் செய்பவர்கள் வைத்தியரிடம் கேட்டறிந்து கொள்ள வேண்டும். இவ்விரு நோய்களும் இலங்கையை விட இந்தியாவின் சில பாகங்களில் அதிகமாகக் காணப்படுவதால் இந்தியாவிற்குப் பயணம் செய்பவர்கள் மிகக்கூடிய அக்கறை கொள்வது நன்று. எனவே இவ்விரு நோய்களையும் வந்த பின் குணப்படுத்துவதை விட வரமுன் காப்பதே சிறந்தது.

அடுத்ததாக மலேரியா எனப்படும் நடுக்கத்துடன் கூடிய காய்ச்சலை எடுத்துக்கொள்வோம். இது நுளம்பினால் பரவும் ஒரு நோய். இந்நோயை ஏற்படுத்தும் கிருமிகள் இலங்கையில் பிரதானமாக இரண்டு வகைகள் ( Plasmodium vivax, Plasmodium falciparum) காணப்படுகின்றன. இவற்றிலொன்று மூளைக்காய்ச்சலை ஏற்படுத்துவது. அத்துடன் சில மலேரியா நுண்ணங்கிகள் சில மலேரியா மருந்து வகைகளுக்கு எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்கின்றன. இக்கிருமியின் வாழ்க்கை வட்டம் சிக்கலானதாக இருப்பதால் மலேரியா குளிசையை பயணம் செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முதல் ஆரம்பித்து பயணம் முடிந்த பின்னும் 5 – 6 வாரங்களுக்கு தொடரவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்குளிசையை உணவுடன் சேர்த்து எடுத்தால் (வெறும் வயிற்றில் எடுக்காமல்) இதன் பக்கவிளைவுகளான ஓங்காளிப்பு, வாந்தி என்பனவற்றைத் தவிர்த்துக் கொள்ளமுடியும். மேலும் மலேரியா நோயைக்காவும் நுளம்பு காணப்படும் பிரதேசங்களுக்கு (கதிர்காமம், வன்னி, யாழ்ப்பாணம் …) செல்வதை கர்ப்பிணிப்பெண்கள் போன்றவர்கள் முற்றாகத் தவிர்த்துக் கொள்ளலாம். நுளம்பை அருகவரவிடாது தடுக்கும் மருந்து வகைகளை (Mosquito repellants) உடலில், (குழந்தைகள் தவிர்ப்பது நன்று) உடையில், நுளம்புவலையில் பூசுவதன் மூலம் நுளம்புக்கடியைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

திருப்திகரமான முன்னேற்பாடுகளைச் செய்தபின் பயணத்தைத் தொடர்ந்திருந்தாலும் சிலருக்கு நோய் தொற்றிவிடுகிறது. இவ்வாறு தொற்றும் நோய் சில வேளைகளில் நாடு திரும்பிய பின் சில வாரங்களிலோ அல்லது சில மாதங்களிலோ நோய்க்குரிய அறிகுறிகளைக் காட்டலாம். நாடு திரும்பிய பின் நோய்வாய்ப்பட்டு வைத்திய ஆலோசனை பெறும்பட்சத்தில் அந்நோயானது பயணத்தின் போது தொற்றியிருக்கலாமாவெனக் கேட்டறிந்து கொள்வது நன்று.

நீண்ட நேர விமானப்பயணத்தின் போது ஏற்படும் பாரிய பிரச்சனை நாளங்களில் குருதி கட்டிபடுதலாகும். இது ஆங்கிலத்தில் Deep vein thrombosis என அழைக்கப்படுகிறது. இது இளவயதினரை விட முதியோரையே அதிகமாகப் பாதிக்கின்றது. இந்நாளங்களில் உருவாகும்; குருதிக்கட்டிகள் குருதி மூலமாகக் கடத்தப்பட்டு நுரையீரலைச் சென்றடையுமாயின் மரணத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு கடத்தப்படும் தன்மை சிலரது குருதி அமைப்பில் இயற்கையில் காணப்படுகிறது.

இந்நோய்க்கான அறிகுறிகளாவன கால் வீங்குதல், (வலியுடன் அல்லது வலியில்லாமல்) கெண்டைக்காற்பகுதியில் வலி, சில வேளைகளில் மெல்லிய காய்ச்சல் என்பன. கட்டிபட்ட குருதி நுரையீரலை அடையும் போது நெஞ்சுவலி, மூச்சுமுட்டுதல், இருமும் போது இரத்தம் கலந்த சளி வருதல் என்பனவாகும். எனவே நீண்ட நேர விமானப்பயணத்தின் பின் ஒருவருக்கு மேற்குறிப்பிட்ட நோய் அறிகுறிகள் தோன்றுமாயின் தாமதியாது மருத்துவ உதவியை நாடவேண்டும்.

இந்நோயைத் தவிர்ப்பதற்கான சில அறிவுரைகள் பின்வருமாறு பயணத்தின் போது இடைக்கிடையே எழுந்து நடப்பது,(இருந்தவாறு காலாட்டுவது சிறந்த பயனளிக்காது) போதியளவு நீர் அருந்துவது, சிறுநீர்ப்போக்கை அதிகமாக்கி நீரிழப்பை ஏற்ப்படுத்தும் பானங்களாகிய மதுபானம் கோப்பி போன்றவற்றைத் தவிர்ப்பது என்பனவாகும்.